யாழில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு. அடுத்தமுறை சிறை செல்லவும் தயார்?

வடகிழக்கில் இடம்பெற்றுவரும், நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து இன்று யாழ்.நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்.நீதிமன்றிடமிருந்து பொலிஸார் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது.இன்று பிற்பகல் 1.00 மணியளில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்தது. இதனையடுத்து அதிகாலை முதலே நகரில் பெருமளவு பொலிஸாரும், பெருமளவு இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நண்பகல் 12.00 மணியளவில் குறித்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தையும், அசம்பாவிதத்தையும் ஏற்படுத்த சில தரப்புகள் முனைந்து வருவதாக தெரிவித்த யாழ்.பொலிஸார் அதனாலேயே ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டு வெளியிடங்களிலிருந்து வந்த மக்கள் மீளவும் அவர்களது இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் விசேட பத்திரிகையாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டது, இதில் ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், போன்ற கட்சியினர் கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், படைப்புலனாய்வாளர்களுக்கும் எதிராக முழங்கினர்.

தொடர்ந்து நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவுக்கு எதிராக நாமும் நீதிமன்றம் சென்று எமது நிலைப்பாடுகளைக் குறிப்பிட்டு போராட்டத்தை நடத்துவதென அனைத்துத் தரப்பினரும் தீர்மானித்ததுடன், ஆக்கிரமிப்பு, குடியேற்றங்கள் உள்ளிட்ட தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கும் இலங்கை அரசின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் வரையில் தொடர்ந்தும் போராடுவோம் எனவும்,
இதுவே நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் கடைசிச் சந்தர்ப்பமாக இருக்கும் எனவும் தெரிவித்ததுடன், அடுத்த கட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி மக்களுக்காக போராடி சிறைகளுக்குச் செல்வோம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை இந்த இடத்தில் சகல கட்சியினரும் கட்சி வேறுபாடுகளை களைந்து மக்களுக்காக ஒற்றுமையுடன் கலந்து கொண்டிருந்தனர்.யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தமிழ்தேசிய கூட்டமைப்பும்  ஜனநாயக மக்கள் முன்னணியும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

களத்தில் இருந்த கிடைத்த மற்றொரு தகவலின்படி ரெலோ சிவாஜிலிங்கம் 25 பேருடன் சிறைசெல்ல தயாராக இருந்ததாகவும் முதலில் சவால்விட்டு பின்னர் ஒருபோராட்டத்தில் சிறைசெல்லலாம் என சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியதாகவும் தெரியவருகின்றது. தமிழ்க்காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.தமிழ் தேசிய மக்கள் தேசிய முன்னணியின் போராட்டத்தினை வழிநடத்திய கஜேந்திரன் இதுவிடயத்தில் சரியான முடிவை எடுக்க தவறிவிட்டதாகவும் கிடைத்த மக்கள் ஆதரவினை பயன்படுத்த தவறிவிட்டதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர் ஒருவர் எமக்கு கருத்து தெரிவித்தார்.

Related Posts