நடுவீதியில் கேக் வெட்டி பிறந்தநாளினை கொண்டாட முயன்ற இளைஞர்களை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ளே வீதியொன்றில் பிறந்தநாளை நேற்று இரவு இளைஞர்கள் சிலர் கொண்டாட முயன்றுள்ளார்கள். அதன் போது தமது மோட்டார் சைக்கிள்களை வீதியின் குறுக்கே நிறுத்தி அதன் மீது பிறந்த நாள் கேக்கினை வெட்ட இளைஞர்கள் தயாராகி உள்ளனர்.
அந்நேரம் வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்த கோப்பாய் காவல்துறையினர் குறித்த வீதியால் சென்ற போது வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்தமை தொடர்பில் குறித்த இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.
அதன் போது , கேக் வெட்ட என கூரிய முனையினை உடைய கத்தியை இளைஞர் ஒருவர் கையில் வைத்து இருந்தமையால் , குறித்த இளைஞர் குழுவுக்கும் வாள் வெட்டு குழுக்களுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் இளைஞர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பதினேழு மற்றும் பதினெட்டு வயதுடையவர்கள் எனவும் அவர்களிடத்தில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.