யாழ். மானிப்பாயில் ஆவாக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் இளைஞரொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளில் பல புதிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
ஆவா குழுவிலிருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்படும் மற்றொரு குழுவின் தலைவன் மீது தாக்குதல் நடாத்தவே இணுவில் பகுதிக்கு மூன்று மோட்டார் சைக்கிள்களில் குறித்த நபர்கள் வந்துள்ளதாக இதுவரை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களிலிருந்து சந்தேகிப்பதாக விசாரணைகளுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.
நேற்று முன்தினம்(20) இரவு-08.40 மணியளவில் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஆவாக் குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர்.
ஆவா குழு இணுவில் பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்த வருவதாக மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன் கூட்டியே பிரதேசத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கமைய கோப்பாய், மானிப்பாய் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவினர் இரவுநேர விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸார் பல இடங்களிலிலும் பாதைகளில் வாகனங்களை சோதனை செய்துள்ளனர். அதன்படியே இணுவில் இணைப்பு வீதியிலும் பொலிஸ் குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வருவதை அவதானித்துள்ள பொலிஸார் அம்மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சமிக்ஞை காண்பித்துள்ளனர்.
ஆனால், அதனை பொருட்படுத்தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்டார் சைக்கிளில் முன் நோக்கிப் பயணிக்கவே பொலிஸார், தமது தற்காப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
இதன்போது என்.பி. பீ.எப்.ஏ-4929 எனும் இலக்கத்தையுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது இரண்டு துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.
இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடின்றி அருகிலுள்ள மதிலுடன் மோதி விழுந்துள்ளதுடன் குண்டடிபட்ட இளைஞனும் படுகாயமடைந்துள்ளான்.
இதனையடுத்து 23 வயதான கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் எனும் இளைஞனைப் பொலிஸார் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்தான்.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட இடத்திலிருந்து குறித்த மோட்டார் சைக்கிளுக்கு மேலதிகமாக இரண்டு வாள்கள், மேலும் இரு கூரிய ஆயுதங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மோட்டார்ச்சைக்கிளின் இலக்கத்தகடும் போலியானது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ள பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்பினரொருவரினுடையதாக இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படும் பணப்பையொன்றையும் மீட்டுள்ளனர்.