யாழ்.மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களப் பிரிவினால் தொழிற்சந்தை நிகழ்வு – 2013 எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் தொழிற்சந்தையினை நடத்தவுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
யாழ்.மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழிற்பயிற்சி வகுப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த தொழிற்சந்தை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.
இதில், உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆளனியினரைத் தேர்வு செய்வதற்காக அரச, தனியார் துறையினைச் சேர்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், தொழிற்சாலை பயிற்சி அதிகார சபை (VTA), உயர் தொழில்நுட்ப நிறுவனம் (ATI), காகிள்ஸ் நிறுவனம், காப்புறுதித்துறை நிறுவனங்கள், ஹோட்டல்கள், பாதுகாப்புச் சேவை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கணினி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் வருகை தரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.