யாழில் தொலைக்காட்சி இணைப்புக்களைப் பெற்றுத்தருவதாக மோசடி

யாழ்ப்பாணத்திலிருந்து தொலைக்காட்சி சேவை நடத்திவரும் நிறுவனமொன்று விநியோகித்த டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொலைகாட்சி சேவைக்கென பெருமளவு பணத்தைச் செலுத்தி இணைப்புக்களை வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மேற்குறித்த தொலைக்காட்சி குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்ட டொல்பின் என்ற தொலைக்காட்சிச் சேவை திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டததால், அதனை பார்வையிடவென பல ஆயிரம் ரூபாக்களைச் செலுத்தி இணைப்புக்களை பெற்ற தாம் கைவிடப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சில மாதங்களுக்கு முன்னர் கொக்குவில் பகுதியிலிருந்து டொல்பின் என்ற பெயரில் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கென தொலைக்காட்சி நிறுவனம் தனியான டிஜிட்டல் பெட்டி ஒன்றை 6 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்திருந்தனர்.

இதனூடாக இந்திய தொலைகாட்சி சேவைகள் உட்பட 40 தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்படும் என்று முதலில் தெரிவித்திருந்தபோதிலும் சில வாரங்கள் மட்டுமே 4தொலைக்காட்சி சேவைகள் நடைபெற்றன.

பின்னர் 20 சேவைகள் மாத்திரமே ஒளிபரப்பாகி வந்தன. கடந்த வாரம் அதுவும் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. இதனை ஒளிபரப்பிவந்த எலெக்டோரெக் என்ற நிறுவனம் இந்த சேவைகளை திடீரென்று நிறுத்தியதற்கு காரணம், அவர்கள் இந்த சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னர் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் (ரிஆர்சி) முறையான அனுமதியை பெறவில்லை.

இதன் காரணமாக, இச்சேவையினை உடனடியாக நிறுத்துமாறு ரிஆர்சி உத்தரவிட்டதாலேயே நிறுத்தப்பட்டதாகவும் தெரிவருகின்றது.

இந்த நிலையில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் (ரிஆர்சி) முறையான அனுமதியை பெறவில்லையென்ற புட்டு வெளியாகிவிடும் என்பதானாலேயே டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ரிஆர்சியின் பணிப்பாளர் நாயகம் அனு பலபிட்டவைத் உள்ளுர் ஊடகங்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, யாழ்ப்பாணத்தில் இவ்வாறு டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையை நடாத்துவதற்கு இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், தமது அனுமதியில்லாது ஒளிபரப்புவது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த தொலைக்காட்சி சேவையை பணம் கொடுத்து வாங்கிய மக்கள் தமது பணத்னை இழந்து தவிக்கின்றனர்.

Related Posts