யாழில் தொடரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் – மீண்டுமொரு சம்பவம் பதிவு!

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்குச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், நேற்று வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வானையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை விவாகரத்து பெற்ற நிலையில், சிறுமி தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாயாருக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த நபர் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்ற நேரங்களில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி தனது தாயாருக்கு தெரியப்படுத்திய போதிலும், தாயார் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தாத நிலையில் சிறுமி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவரது தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையின் முறைப்பாட்டின் பிரகாரம் தாயின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை மீட்ட பொலிஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Related Posts