யாழில் திருடப்பட்ட பிரதமரின் செயலாளரின் தொலைபேசி மீட்பு!!!

பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, அவருடைய செயலாளரடமிருந்து திருடப்பட்ட ஸ்மார்ட்போன் பொலிசாரால் நேற்று (17) மீட்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் வைத்து தொலைபேசியை பொலிசார் மீட்டனர். ஸ்மார்ட்போனை திருடிய கில்லாடியும் அடையாளம் காணப்பட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். 14ம் திகதி மாலை யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர விபத்து சிகிச்சைப்பிரிவை திறந்து வைத்தார். இதன்போது, பிரதமரின் பெண் செயலாளரும் வந்திருந்தார்.

பெண் செயலாளரின் ஸ்மார்ட் போனை, வைத்தியசாலைக்குள் வைத்து கில்லாடியொருவர் திருடியிருந்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் நடந்த இந்த திருட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அன்று மாலையே யாழ் பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தார்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன், தொலைபேசி இணைப்பை வழங்கிய மொபிடல் நிறுவனத்திடமிருந்து தொலைபேசியின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை பொலிசார் பெற்றனர். இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலை சிசிரிவி கமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் நேற்று மாலை யாழ் நகரத்திலுள்ள விற்பனை நிலையமொன்றிலிருந்து தொலைபேசி மீட்கப்பட்டது.

அரியாலையை சேர்ந்த ஒருவரே இந்த திருட்டில் ஈடுபட்டவர். சிசிரிவி காட்சிகளில் அவர் திருட்டில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டார். திருடிய ஸ்மார்ட் போனை, யாழ் நகரிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் விற்பனை செய்திருந்தார்.

நேற்று அந்த தொலைபேசியை பொலிசார் மீட்டனர்.அரியாலையை சேர்ந்த திருடன் இன்னும் கைதாகவில்லை.

Related Posts