Ad Widget

யாழில் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி வரும் ஆசாமி!

யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்ட மர்ம ஆசாமி, மேற்படி தனியார் வங்கியுடன் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர் என குறித்த தனியார் வங்கி கூறியுள்ளது.

மேற்படிச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.மாவட்டத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்று தருவதாக கூறி சுரேஸ் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பலருடன் தொடர்புகளை உண்டாக்கி பேசியுள்ளார்.

இவ்வாறு பேசும் போது வங்கியில் வேலை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்று வழங்கப்படும். எனவும் மோட்டார் சைக்கிளுக்காக 6,800 ரூபா பணம் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு காப்புறுதி செய்து கொள்வதற்காக 13,500 ரூபாய் பணம் ஆகியவற்றை பிரபல வங்கி ஒன்றின் வைப்புக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அதற்குப் பின்னதாக வேலை உறுதி செய்யப்பட்டு கடிதம் வழங்கப்படும். எனவும் கூறி வருகின்றார்.

இதனை உண்மை என நம்பிய பல இளைஞர், யுவதிகள் மேற்படி ஆசாமி கூறிய வங்கி கணக்கில் பணத்தை வைப்புச் செய்திருக்கின்றார்கள். அவ்வாறு வைப்புச் செய்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

மேலும் வேலை கிடைப்பதற்கு முன்னதாக மோட்டார் சைக்கிள் மற்றும் அதற்காக பணம் வைப்பிடச் சொல்கின்றமை ஆகியவற்றை அவதானித்து சந்தேகம் உண்டான நிலையில் பணம் வைப்பிலிடுவதை தவிர்த்துள்ளனர்.

எனினும் பலர் பணத்தை வைப்பிலிட்டு ஏமாந்துள்ளனர்.

இந்நிலையில் விடயம் தொடர்பாக மேற்படி தனியார் வங்கியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, மேற்படி ஆசாமி தொடர்பாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவ்வாறான ஒருவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேற்படி ஆசாமி பிரபல்யமான வங்கி ஒன்றின் கணக்கு இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதுடன், பணம் கேட்கும் சிலரை நேரில் சந்திக்கவும் கேட்டிருக்கின்றார்.

அந்தவகையில் அவர் தொடர்பான தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே இந்த முறைகேடு தொடர்பாக தாங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. என அவர்கள் தெரிவித்துள்ளனர்..

இவ்வாறான மோசடி பேர்வழிகளிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எனவும் கேட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி சுரெஸ் என்ற மோசடி ஆசாமி தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கொடுத்த பணத்தை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டு நிற்கின்றனர்.

Related Posts