யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு !!

யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

கடந்த இரு நாட்களில் மட்டும் எட்டுப்பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், மழை பெய்து வெற்றுக் காணிகள், வீட்டில் காணப்படும் பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்து டெங்கு நுளம்பின் பரவலை அதிகரித்து வருகிர்ந்து. இதனால் டெங்கு காய்ச்சலினால் பாதிப்படைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

அண்மையில் கூட மூன்று வயது நிரம்பாத சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வருடத்தில் டெங்கு காய்ச்சலினால் ஏற்பட்ட முதலாவது இறப்பு இதுவாகும்.

நேற்றைய தினமும் யாழ்.சோமசுந்தரம் வீதியினை சேர்ந்த ஐவர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பாடசாலை செல்லும் சிறுவர்களாவர்கள்.

இதே போல் சுண்டுக்குளி, குருநகர், கோண்டாவில், மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இவ்விடத்து மக்கள் தவிர அனைவரும் டெங்கு காய்ச்சல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

மேலும் மேற்குறித்த இடங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால், யாழ்.மாநகர சபை மற்றும் அந்தந்த இடங்களை சேர்ந்த பிரதேச சபைகள் இது விடயத்தில் கவனம் செலுத்தி டெங்கு நுளம்பின் பரவலை கட்டுப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை காய்ச்சல் என சந்தேகிக்கப்படுபவர்கள் உடனடியாக அரச மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்று கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்புக்களில் இருந்து தப்பித்து கொள்ள முடியும் எனவும் வைத்திய சாலை வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts