யாழில் சைவசித்தாந்த, திருமந்திரப் பயிற்சி நெறி

அகில இலங்கை சைவ மகா சபை, இந்தியா தருமபுரம் ஆதீனத்தின் அனுசரணையுடன் சைவ சித்தாந்தம் மற்றும் திருமந்திர பயிற்சி நெறியை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கு சென்ற சைவ மகா சபையின் பிரதிநிதிகள் தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்களின் குரு முதல்வர்களுடன் கலந்துரையாடியதன் பேரில் யாழ்ப்பாணத்தில் இந்தப் பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது.

மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தப் பயிற்சி நெறி, ஒரு வருட காலத்தில் நிறைவடையும். பயிற்சி நிறைவில் திருவாவடுதுறை ஆதீனத்தால் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் தலைமையிலான போதனாசிரியர்களால் இந்தப் பயிற்சி நடத்தப்படவுள்ளது.

தைப்பூசத் தினமான எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9 மணிக்கு கீரிமலையில் உள்ள குழந்தைவேல் சுவாமிகள் சமாதி, மெய்கண்டார் ஆதீன குரு முதல்வர் சமாதி ஆகியவற்றில் இடம்பெறும் வழிபாடுகளைத் தொடர்ந்து மேற்படி பயிற்சி நெறி ஆரம்பமாகும். தொடர்ந்து சைவ மகா சபையின் கொக்குவில் தலைமை அலுவலகத்தில் பயிற்சிகள் நடைபெறும்.

பாடசாலைகளில் சைவ சமய பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், அறநெறி ஆசிரியர்கள், சமயப் பிரசங்கிகள், சிவதொண்டர்கள் மற்றும் சைவ சமயத்தில் ஈடுபாடுடையோர் இந்தப் பயிற்சி நெறியில் பங்குபற்ற முடியும்.

பயிற்சியில் இணைய விரும்புபவர்கள் கொக்குவிலில் உள்ள அலுவலகத்தில் பதிவுசெய்யலாம். அல்லது 077-0711152, 021-3203284 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்று சைவ மகா சபை தெரிவித்துள்ளது

Related Posts