யாழில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதை!

இலங்கையில் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதையினைக் கொண்ட முதல் நகரமாக யாழ்ப்பாணம் அமையவுள்ளது.

இதற்கு உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்கடொலர் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக யாழ்நகர் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பாடசாலைகள், முக்கிய அரச அலுவலகங்களை இணைக்கும் சைக்கிள்களுக்கான பிரத்தியேகப் பாதை அமைக்கப்படவுள்ளது.

20 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இப்பாதையூடாக யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலாப்பயணிகள் இலகுவாக சென்று பார்வையிடுவதுடன் இதனூடாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு சுற்றுலாத்துறையும் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சைக்கிள் பாவனையை பெரும்பான்மையாகக் கொண்ட யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடிவதுடன் பாடசாலை மாணவர்கள் இதனூடாக பெரு நன்மையடையவுள்ளனர்.

தற்போது நாள் ஒன்றுக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் வரையான பயணிகளும் 30 ஆயிரம் வரையான மோட்டார் சைக்கிள்களும் யாழ்.நகருக்குள் வந்து போகும் நிலையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் போக்குவரத்து நெரிசல்கள் குறைவதோடு பிரத்தியேக சைக்கிள் பாதை அமைப்பால் விபத்துக்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts