தென்மராட்சி இலக்கிய அணி நடாத்திய கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல்-05.45 மணி முதல் யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க் கோட்டத்தில் இடம்பெற்றது.
குறித்த விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ‘அருட்செல்வர்’ எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்க் கோட்ட வாயிலில் நின்று நிறைகுடங்கள் முதலான மங்கலப் பொருட்களுடன் அன்பர்கள் சூழ்ந்துவர குடையின் கீழ் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் நடந்து வர உயர் மரியாதைகள் வழங்கப்பட்டு விழா மேடை நோக்கி அழைத்து வரப்பட்டார்.
அப்போது சபையில் குழுமியிருந்த கல்வியியலாளர்கள், பல்துறை சார்ந்தோர்கள் உள்ளிட்ட பெருந்தகைகள் அனைவரும் எழுந்துநின்று அவரை இன்முகத்துடன் வரவேற்றனர்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அதிபர் கையிலாயபிள்ளை மற்றும் தொழிலதிபர் ஸ்ரீபிரகாஷ் ஆகியோர் இணைந்து தென்மராட்சி இலக்கிய அணி சார்பில் ‘அருட்செல்வர்’ விருதை வழங்கி வைக்க சபையில் கூடியிருந்தோரின் பெருமளவானோரின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் கலாநிதி ஆறு.திருமுருகன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட கலாநிதி ஆறு. திருமுருகன் ஏற்புரையாற்றியதுடன் பின்னர் கம்பன் கழக ஸ்தாபகரும், உலகப் புகழ்பெற்ற பேச்சாளருமான கம்பவாரிதி இ.ஜெயராஜ்ஜின் கால்களில் விழுந்து மரியாதை செலுத்தினார்.
இதேவேளை, யாழ். தென்மராட்சி நாவற்குழியில் உலகப் பிரசித்தி பெற்ற திருவாசக அரண்மனையை நிறுவி சைவத்தமிழ் உலகிற்கும், ஈழத்திற்கும் பெருமை சேர்த்த செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் உன்னத பணிகளைப் பாராட்டியே மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.