தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரனை விமர்சித்து யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் உருவச் சிலைக்கருகில் உருவப் பொம்மை ஒன்று வைக்கப்பட்டது.
எனினும், இதை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார் தமது ஜீப்பில் எடுத்துச் சென்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சிங்கள ஊடகமொன்றுக்கு அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி தமிழர் தரப்பில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று (13) அவருக்கு எதிராக யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் உருவச் சிலைக்கருகில் உருவப்பொம்மை ஒன்று வைக்கப்பட்டது.
அதில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, நான் ஒரு தமிழ் இன துரோகி எனவும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அங்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார், குறித்த உருவப் பொம்மையைத் தூக்கி தமது ஜீப்பில் எடுத்துச் சென்றுள்ளனர்.