சாவகச்சேரி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் ஆதரவாளர்ளை தாக்கிய சம்பவம் தொடர்பாக பொலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினரும், பிரதேச சபை உறுப்பினரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23ம் திகதி இரவு 8.30 மணியளவில் சாவகச்சேரி பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் ஆதரவாளர்ளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் தடிகள், இருப்புக் கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில் முதுகுத்தண்டுப்பகுதியில் பலத்த காயமடைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் ஆதரவாளர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலீசில் முறையிட்டதைத் தொடர்ந்து குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர சபை உறுப்பினரும், பிரதேச சபை உறுப்பினரும் சாவகச்சேரி பொலீசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நேற்றய தினம் பொலீஸ் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்ததுடன், குறித்த சந்தேக நபர்களுடனும், பொலீஸ் அதிகாரிகளிடமும் உரையாடியதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரே பிரதேசத்தவர்கள் என்பதாலும், இளைஞர்கள் என்பதாலும், அவர்களின் எதிர்காலங்களை கருத்தில் கொண்டும் அவர்கள் மீது வழக்குப் பதிவுகள் எதுவும் செய்யப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமது கட்சியை சேர்ந்த குறித்த நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்களை மீட்டெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வராததை கடுமையாக விமர்சித்த குறித்த உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களும், அங்கஜன் இராமநாதனின் இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது