யாழில் சீட்டு பிடிப்பது, அதிகவட்டி முறைமை, மீளமுடியாத நெருக்கடியை உருவாக்கும்: பொலிஸார்

cash-money-paymentயாழ்.குடநாட்டில் சீட்டும், மீற்றர் வட்டியும் பொதுமக்களில் பலரைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளுவதனால் இவற்றைக் கையாளுபவர்கள் மீது மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ்.பொலிஸார் அறிவுறுத்தல் விடுவித்துள்ளனர்.

சீட்டுப் பிடித்தவர்கள், கட்டியவர்கள் சிலரும், மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்றுக் கொண்டவர்கள் சிலரும் ஊரைவிட்டுத் தலைமறைவாகிய பல சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.

பல இலட்சக்கணக்கில் சீட்டுப்பிடித்தவர்கள் சிலர் அவர்களது வீட்டில் இருந்து இரகசியமாக வெளியேறியுள்ளார்கள். அதே மாதிரி சீட்டை இடையில் எடுத்துக் கொண்டு பல இலட்சக்கணக்கான பணத்துடன் சிலரைக் காணவில்லை.

மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்றுக்கொண்டவர்களும் பணத்துடன் திடீரென மறைந்துள்ளார்கள். இது திட்டமிட்டுச் செய்யப்படும் மோசடியா அல்லது உண்மையிலேயே கடன்தொல்லையா என்பது தெரியவில்லை. சிலர் கோடிக்கணக்கான ரூபாக்களுக்குக் கடனாளிகள் எனக் கூறப்படுகின்றது.

வர்த்தகம் மற்றும் சில முதலீடுகளில் இவர்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை இல்லாமல் கண்டபடி சீட்டுப் பிடித்தும், கட்டியதும், மீற்றர் வட்டிக்குப் பணம் பெற்றுக்கொண்டமையும் இவர்கள் ஊரைவிட்டு ஓடும் நெருக்கடிக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

பத்து வீதம், இருபது வீதம் என மீற்றர் வட்டிக்குச் சிலர் பணம் வழங்குகிறார்கள். வட்டி குட்டி போடும் என்பது போல் இலட்சக்கணக்கிலும், பல ஆயிரக்கணக்கிலும் வட்டிக்குப் பணம் பெற்றுக்கொண்டவர்கள் மீள அதனைச் செலுத்த முடியாமல் செய்வதறியாது திகைத்துப் போய் தற்கொலையும் செய்துகொண்டுள்ள சம்பவங்களும்
உண்டு.

வடமராட்சியில் உள்ள ஒரு பகுதியில் சீட்டுப் பிடிப்பதும், மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இது மற்றைய இடங்களிலும் அமுற்படுத்தப் படல் வேண்டும் என பல பொதுமக்களினால் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீட்டுப் பிடிப்பதற்கும், வட்டிக்குப் பணம் கொடுப்பதற்கும் அனுமதி பெறப்படல் வேண்டும் என்னும் விதிமுறை இருக்குமானால் அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம் என பலராலும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Posts