யாழில் சிறுமிகள் இருவர் கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்! 7 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி வந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

எனினும் நேற்றுமுன் தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர். அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்போது சிறுமி ஒருவர் சாதூரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார். வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றையும்,தான் தப்பி வந்ததையும் தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் இரு சிறுமிகளுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts