யாழில் சாட்சியம் நிறைவு, 795பேர் சாட்சியமளிக்க பதிவு

missing-peple-chavakachchereyஜனாதிபதி ஆணைக்குழுவினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த காணாமற் போனோர் தொடர்பான சாட்சியங்களின் பதிவு நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது.

இந்நிலையில், யாழ். மாவட்டத்திலிருந்து மாத்திரம் 177பேர் தங்களது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ள அதேவேளை இன்னமும் புதிதாக 795பேர் சாட்சியமளிப்பதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் என விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து (14) இன்று திங்கட்கிழமை (17) வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் காணாமற்போன உறவுகள் தொடர்பாக சாட்சிமளிப்பதற்காக 31 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த 254பேருக்கு அழைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற காணமற்போனவர்கள் தொடர்பில் நடைபெற்ற விசாரணையின் போது பெருமளவான குற்றச்சாட்டுக்கள் இராணுவம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் கருணா குழு உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக சொல்லப்படும் விடுதலைப் புலிகளின் மருந்துவப் பிரிவு பொறுப்பாளர் ரேகா, பொறுப்பாளர்களில் ஒருவரான யோகி ஆகியோரின் மனைவியரும் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts