யாழில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவரை, கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி திருநெல்வேலி – நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச் சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவற்குளி பகுதியைச் சேர்ந்த இவர்கள் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட உருமாற்றப்பட்ட 15 பவுண் கட்டிகள் இரண்டு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த கொள்ளைக் கும்பலின் திருட்டு நகைகளைப் பெற்று அதை உருமாற்றம் செய்துவந்த கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவர்களை விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.