யாழில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு பிணை விண்ணப்பம் செய்தனர்.

எனினும், மாணவர்களை பிணையில் விடுவிக்க பொலிஸார் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கினையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையிலேயே யாழ். பல்கலையில் நேற்று சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் உள்ளிட்ட அனைத்தப் பீடங்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மருத்துவ விடுதி உள்ளிட்ட பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படங்கள் மற்றும் போராளிகளின் ஒளிப்படங்கள், தமிழீழ வரைப்படம் என்பன பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்டன. அத்தோடு, தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்களும் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் நேற்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts