‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’ எனக் கோஷமெழுப்பி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இப்போராட்டம் நடைபெற்றது.
இதன்போது ‘அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று’, ‘அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்’, ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு’, ‘உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே’, ‘நல்லாட்சி அரசே ஏமாற்றாதே’, ‘வாய்ப்பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசியல் கைதிகளையா?’, ‘நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.