யாழில் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு மக்கள் கோரிக்கை!- வாழ்வாதாரம் பாதிக்கும் என தொழிலாளர்கள் கவலை

Kallu- thavaranaiயாழ். மாவட்டத்தில் உள்ள கள்ளுத் தவறணைகளை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துவருவதால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொழிலை இழக்கும் அபாயமான நிலை தோன்றியுள்ளது என சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த 1995 ஆம்ஆண்டு இடப்பெயர்வைத் தொடர்ந்து சீவல் தொழில் செய்த பலர் இடப்பெயர்வு காரணமாக தொழிலை இழந்துள்ளதுடன் தற்போது கூலித் தொழிலுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் அண்மைக்காலமாக குடாநாட்டின் பல இடங்களிலும் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதனால் தாம் தொழிலின்றி பாதிப்படையும் நிலை தோன்றும் என சீவல் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் பொது மக்கள் குடியிருப்புக்கள் இல்லாத பிரத்தியேகமான பகுதிகளில் கள்ளுத் தவறணைகள் அமைக்கப்பட்டு விற்பனை மற்றும் கொள்வனவு என்பன இடம்பெற்றது. ஆனால் தற்பொழுது இக் கள்ளுத் தவறணைகளுக்கருகில் மக்கள் குடியேறி வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனைக் காரணமாகக் காட்டி தமது குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள கள்ளுத் தவறணைகளை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்படுகின்ற மதுபானங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மதுபான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் நிலையில் கிராமங்களில் உள்ள கள்ளுத் தவணைகளை மூடுமாறு கோருவதால் தாம் பாதிக்கப்படுவதாகவும் சீவல் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக யாழ். நகரிலுள்ள பல மதுபான விற்பனை நிலையங்கள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் தமது வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற கள்ளுத் தவறணைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பது பொருத்தமற்றது எனவும் சீவல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நெருக்கடியான நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்கள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அத்தியவசியமாகும் எனவும் சமூக ஆர்வலர்களும் தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக சங்க முகாமையாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, கள்ளுத் தவறணைகளை உடனடியாக மூட முடியாது எனவும் காலப்போக்கில் மக்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு கள் உற்பத்தி மற்றும் விற்பனைகளை நவீன மயப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Related Posts