தீபாவளி பண்டிகை விற்பனை கடைகள் அமைப்பதற்கு தென்பகுதி வர்த்தகர்கள் 67 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், திங்கட்கிழமை (20) தெரிவித்தார்.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பண்ணை பகுதியில், புல்லுக்குளத்திற்கு அண்மிய பகுதிகளில் தென்பகுதி வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளனர்.
10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட கடையை அமைப்பதற்கு 15 ஆயிரம் ரூபாய் வாடகை மாநகர சபையால் அறவிடப்படுகின்றது.
அத்துடன், மேலதிக கடைகள் அமைப்பதற்கான அனுமதியும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘தீபாவளி பண்டிகை காலத்தில் தென்பகுதி வர்த்தகர்கள் யாழ். மாவட்டத்திற்கு வந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்குமாறு யாழ். வர்த்தக சங்கம் மாநகர சபையிடம் கோரியிருந்ததாக’ செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லையா என ஆணையாளரிடம் கேட்டபொழுது,
யாழ்;. வர்த்தக சங்கத்தினர் அவ்வாறானதொரு கோரிக்கையை எங்களிடம் முன்வைத்திருந்தனர். இருந்தும் நாம் அவ்வாறு தென்பகுதி வியாபாரிகளை தடை செய்ய முடியாது.
இலங்கையில் எப்பாகத்திற்கும் சென்று வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனைவருக்கும் உரிமையுண்டு.
அவ்வாறு நாங்கள் தடை செய்தால் தென்னிலங்கை வியாபாரிகள் வழக்கு தொடர்ந்து நட்டஈடு கேட்டால் அதனை ஆணையாளர் என்ற ரீதியில் என் சொந்த பணத்திலேயே அதனை செலுத்த வேண்டும்.
அத்துடன், இது பலதரப்பட்ட விதத்தில் மக்களிற்கு நலனாக அமைக்கின்றது. சட்டத்திற்கு முரணான விதத்தில் தென்பகுதி வர்த்தகர்கள் ஈடுபட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.