2016 ஜனவரி முதல் மே 19 வரை யாழ். குடாநாட்டில் 3 கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 50,000ரூபாவுக்கு அதிகமான 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு முதல் 19.05.2016 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் 74 கொலைகளும், 184 பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பியிருந்த கேள்விக்கு நேற்றுச் சபையில் சமர்ப்பித்திருந்த பதிலிலேயே அமைச்சர் சாகல இந்த விடயத்தை தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தனது கேள்வியில், யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை, கொள்ளை, வாள்வெட்டுக் கொலை, அச்சுறுத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு அதைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கை என்ன என்று கேட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்திருந்த பதிலில், மேற்குறிப்பிட்ட குற்றச் செயல்கள் யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ளதாக உறுப்பினர் (டக்ளஸ் தேவானந்த எம்.பி) குறிப்பிடுகின்றபோதும் குற்றச் செயல்கள் தொடர்பான வருடாந்த அறிக்கையின் தகவல்களை ஆராய்ந்து பார்க்கும்போது – கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக்காலமாக பதிவாகும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
யாழ். குடாநாட்டில் 2011 இல் 23, 2012.இல் 16,2013 இல்11, 2014இல் 10,2015இல் 11 என கொலைகள் இடம்பெற்றுள்ளன. 2016 ஜனவரி முதல் மே 19 வரை 03 கொலைகள் இடம்பெற்றுள்ளன.
பாலியல் துஷ்பிரயோகங்கள் 2011 இல் 34, 2012 இல் 41, 2013 இல்36, 2014 இல் 33, 2015 இல் 26, 2016 ஜனவரி முதல் மே 19 வரை 14 சம்பவமும் இடம்பெற்றுள்ளன.
மேற்குறிப்பிட்ட காலப் பகுதிகளில் இடம்பெற்ற 50,000 ரூபாவுக்கு மேற்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் 2011 இல் 51, 2012 இல் 61, 2013 இல் 63, 2014 இல் 36, 2015 இல் 37, 2016 ஜனவரி முதல் மே 19 வரை 16 என மொத்தமாக 264 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, 50,000 ரூபாவுக்கு மேற்பட்ட வீடுடைப்புக் கொள்ளை 2011 இல் 81, 2012 இல் 83, 2013இல் 93, 2014 இல் 107, 2015 இல் 52, 2016 ஜனவரி முதல் மே 19 வரை 23 என மொத்தமாக 439 வீடுடைப்புக் கொள்ளை்ச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இதற்கு மேலும் உரிய நடவடிக்கை திட்டமிடப்படுகின்றது என்பது தெளிவாகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.