யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால் துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அநேக மக்கள் உண்ண உணவின்றி துன்பப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் அதிகமான ஆலயங்கள் காணப்படுகின்றன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக பல ஆலயங்களில் இந்தமுறை மஹோற்சம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
எனவே, ஆலய நிர்வாகிகள் உணவின்றி துன்பப்படுகின்ற மக்களுக்கு அந்த ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கிய நிதியில் ஒரு பகுதியையேனும் மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும். மதத்தின் தர்மத்தை நாம் காப்பாற்ற வேண்டும்.
இந்த விடயத்தினை யாழ்ப்பாணத்திலுள்ள ஆலய நிர்வாகங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். அவ்வாறு உதவி செய்ய விரும்புபவர்கள் தத்தமது பிரதேச செயலர் ஊடாக அனுமதிபெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.