Ad Widget

யாழில் இராவணனுக்கு ஆலயம்!! செந்தமிழில் பூஜை வழிபாடுகள்!!

சிவபூமியான ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாண இராசதானியின் இணுவையம்பதியில் சிவஞான சித்தர் பீடத்தின் அருளாசியுடன், சைவ மகா சபையின் ஆதரவுடன் சைவநெறிக் கூடத்தினரால் ஞானலிங்கேசுவரர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

tamil

ஐந்து தளக் கோபுரத்துடன் இராவணேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ஞான லிங்கத்தைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தின் கருவறையில் இலங்கையிலேயே விசேடமாக செந்தமிழால் தினமும் வழிபாடு ஆற்றப்படவுள்ளது.

சிவ விரதங்களில் மகிமை வாய்ந்த ஆனி உத்தர நாளான எதிர்வரும்-10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-10 மணி முதல் 11 மணி வரையுள்ள சுப வேளையில் தெய்வத் தமிழ்ச் சிவாலயத்திற்கு மஹா கும்பாபிஷேகம் என்று சொல்லப்படுகின்ற திருக் குடமுழுக்குப் பெருவிழா இடம்பெறவுள்ளது. சுவிஸ் ஞானலிங்கேசுவர பிரதம குருக்கள் திருநெறிய சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தொண்டரடிப் பொடிகள் தலைமையிலான சிவத் தமிழ் அருட்சுனைஞர்கள் குழாமினால் தெய்வத் தமிழ் திருமுறை மந்திரங்கள் ஓத ஆகம விதிப்படி இவ்வாலயத்தின் திருக்குடமுழுக்கு இடம்பெறவுள்ளது.

இலங்கையிலேயே விசேடமாகத் தமிழ்த் திருமுறை மந்திரங்களால் வழிபாடுகள் ஆற்றப்படவுள்ள இராவணேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ஞானலிங்கத்தைக் கொண்ட இவ்வாலயத்தின் தனித்துவம் மற்றும் திருக்குடமுழுக்குப் பெருவிழா (மஹா கும்பாபிஷேகம்) என்பன தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை(05-07-2016) மாலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் சுவிஸ் ஞானலிங்கேசுவர பிரதம குருக்கள் திருநெறிய சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தொண்டரடிப் பொடிகள் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,

இராவணனை சைவசமயத்தவர்கள் போற்றினாலும் அவருக்குத் தகுந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இலங்கைத் திருநாட்டில் முதன் முதலாகக் கருவறைக்குள் இராவணேஸ்வரனும் அதற்கு மேல் ஞானலிங்கம் அமையவிருக்கிறார். திருமஞ்சனம் என்று சொல்லப்படுகின்ற அபிஷேகம் சிவனுக்கு இடம்பெறும் அதே வேளையில் இராவணேஸ்வரனுக்கும் அபிஷேகம் இடம்பெறும். இந்த அபிஷேகம் வேறு எங்கும் இடம்பெறாத அரிய நிகழ்வாக அமையும்.

25 ஆயிரம் கிலோ எடை அளவுடையதாகவும், ஐந்தடி உயரம் கொண்டதாகவும் இராவணேஸ்வரனின் சிற்பம் இங்கு செதுக்கப்பட்டிருக்கிறது. செதுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் அனைத்துமே எமது மண்ணிலிருந்தே பெறப்பட்டுள்ளது.

சுவிஸில்-2007 ஆம் ஆண்டு கருவறையில் தமிழ் வழிபாட்டை ஆரம்பிக்கும் போது அதற்குப் பத்துப் பேர் மட்டுமே ஆதரவு தந்தார்கள். ஆனால், எங்களுடைய செயலில் சுத்தமும், உருக்கமான உள்ளன்புடனும் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறோம்.

ஆனி உத்தர நாளன்று ஐந்து தளக் கோபுரத்துடன் இராவணேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ஞான லிங்கப் பெருமானுக்குத் திருக் குடமுழுக்கு இடம்பெறவுள்ளது.

ஈழத்தின் சைவத்தமிழ் வரலாற்றில் ஒப்புயர்வற்ற மன்னனும், சிவபூமி என இந்த மண்ணிற்குப் பெயர் வரக் காரணமாக ஈழமெங்கும் சிவலிங்கங்களைப் பதித்தவனுமான இராவணேசுரன் சிவலிங்கத்தைத் தாங்கிய நிலையில் அமைந்திருக்கும் மூலமூர்த்தி மற்றும் இறைமூர்த்தங்கள் நகர்வலம் எதிர்வரும் -8 ஆம் திகதி மாணிக்க வாசகர் குருபூஜை தினத்தில் இடம்பெறும். இந்த நகர் வலம் சங்கிலியன் உள்ளிடட வீர சைவத் தமிழ் மன்னர்கள் ஆண்ட யாழ்ப்பாண இராச தானியின் நாற்றிசை கோயில்கள் அமைந்திருக்கும் நல்லூரை வலம் வந்து யாழ். நகர் ஊடாக பயணித்துக் காங்கேசன்துறை சாலை வழியாக ஆலயத்தைச் சென்றடையும்.

திருக்குடமுழுக்கு இடம்பெறுகின்ற எதிர்வரும்-10 ஆம் திகதி ஞாயிறு காலை-7.30 மணிக்கு மருதனார்மடம் சந்தியில் அமைந்திருக்கும் சைவப் பெருவள்ளல் இராமநாதனுடைய சமாதியுடன் கூடிய சிவாலயமாக இராமநாதேசுவரர் திருக் கோயிலிலிருந்து ஆலயம் வரை பாதயாத்திரை சைவ நெறிக் கூடத்தாலும், சைவமகா சபையாலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் சிவஞான சித்த பீட நிறுவுனர் நடராஜா சிவயோகநாதன், அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச் செயலாளர் வைத்தியகலாநிதி பி. நந்தகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்ததுடன் சைவமகாசபையின் செயற்பட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts