யாழில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்படுகிறது: ஆஸி தூதுவரிடம் யாழ் கட்டளைத் தளபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் படிப்படியாக குறைக்கப்பட்டு அவ்விடங்களுக்கு பொலிஸார் நியமிக்கப்பட்டு வருகின்றனர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.இன்று திங்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய துதுவர் றொபின் மூடி குழுவினரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைiமைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமானப் பணிகள், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கு விளக்கம் அளித்ததாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குடாநாட்டில் இராணுவத்தின் பாவனையில் இருந்த வீடுகள், மற்றும் நிலங்களை மீளக் கையளிக்கப்பட்டு வருகின்றதென தெரிவித்த மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, எஞ்சியுள்ள நிலங்களையும், வீடுகளையும் பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டு பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவுஸ்திரேலியத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் கடந்த 3 தசாப்தங்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறானதொரு நிலைமையை மீண்டும் அனுபவிக்க இலங்கை மக்கள் விருப்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினரின் மனிதாபிமானப் பணிகளை இலங்கைக்கான அவுஸ்ரேலியக் குழுவினர் பாராட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts