யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று (03) முதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள், தொலைபேசிகளை பேசியப்படி வாகனங்களை செலுத்துபவர்கள், பாதசாரிகள் கடவைகள் இருக்கத்தக்கதாக அதற்கு அருகாக வீதியைக் கடக்கின்றவர்கள், வீதிகளில் வாகனங்களின் பயணப்பாதையில் எச்சில், வெற்றிலை என்பனவற்றைத் துப்புகின்றவர்கள், போக்குவரத்து ஒழுக்க மீறல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது இன்று முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
அத்துடன், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அருகாகவும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று முதல் பலப்படுத்தப்படுகின்றன.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வுத் திட்டத்தை இந்த வருடமும் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சீரானதும் ஆரோக்கியமானதுமான போக்குவரத்தை மேற்கொண்டு, தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என தெரிவித்தார்.