இலங்கையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், அங்கு வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்துவருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இடம்பெயர்ந்தவர்களின் 43 முகாம்கள் இருப்பதாக தாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
1500 குடும்பங்களைச் சேர்ந்த 6000 பேர் வரையில் இந்த முகாம்களில் வாழ்ந்துவருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் எந்தவொரு இடம்பெயர்ந்தோர் முகாம்களும் இல்லை என்று மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் கூறிவந்ததாகவும், ஆனால் தாங்கள் நடத்தியுள்ள ஆய்வில் அதற்கு மாறான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பதிகாரி அந்தனி ஜேசுதாஸன் கூறினார்.
நாட்டில் இன்னும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் இருப்பதை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அந்த முகாம்களில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெரும்பாலும் 1990களில் இடம்பெயர்ந்த மக்களே இந்த முகாம்களில் வசித்துவருவதாகவும் அந்தனி ஜேசுதாஸன் கூறினார்.
இந்த முகாம்களில் வாழும் மக்களுக்கான அரசாங்கத்தின் உதவிகள் 2006-ம் ஆண்டிலிருந்தும் 2010-ம் ஆண்டிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பதிகாரி தெரிவித்தார்.