யாழில். ஆலயக்கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்ட கும்பல் யாழ். காவற்றுறையினரால் கைது

யாழில் கோயில்களில் அண்மைக்காலமாக சிலைகள், விக்கிரகங்கள், வாகனங்கள் என்பவற்றைக் கொள்ளையிட்ட குழு ஒன்றை காவற்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் யாழ். காவற்றுறையினர் மீட்டுள்ளனர்.அதனடிப்டையில் அவர்களால் களவாடப்பட்ட பிள்ளையார், அம்மன் சிலைகள் மற்றும் ஒரு தொகுதி கோயில் வாகனங்கள் என்பன யாழ். புகையிரத வீதியை அண்மித்துள்ள மரக்காலை ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெரியவருவதாவது,

கோயில் வாகனங்கள் குறித்த மரக்காலையில் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இது பற்றி யாழ் காவற்றுறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து அங்கு விரைந்து சென்ற யாழ். காவற்துறையினர் சிலைகள், வாகனங்கள் என்பவற்றை மீட்டதோடு, கோயில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய வெண்கலத்திலான ஒன்றரை அடி உயரமுடைய பிள்ளையார் சிலை மற்றும் அம்மன் சிலை என்பனவும் பெரிய உருவிலான சிவப்பு வர்ணம் தீட்டப்பட்ட குதிரை, சிறிய அளவிலான குதிரை, இடபம், நாய், யானை வாகனங்கள் என்பனவே நேற்று மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வாகனங்களில் சிறியளவிலான குதிரை மற்றும் இடபவாகனங்கள் என்பன யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள கொண்டலடிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கடந்த வியாழக்கிழமை திருடப்பட்டவை என்று கோயில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய வகைக் குதிரை வாகனம், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியிலுள்ள அம்பலவாண வீரகத்தி விநாயகர் ஆலயத்துக்குச் சொந்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக ஆலயங்களில் உள்ள பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், குறித்த மரக்காலை உரிமையாளர் உட்பட பலர் இந்தக் கோயில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன் போது மேலும் பல ஆலயங்களில் கொள்ளையிடப்பட்ட சிலைகள், வாகனங்கள் என்பன மீட்கப்படலாம் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts