அமெரிக்கத் துணைத்தூதரகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்குமாறு அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளிடமே யாழ். ஆயர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க இராஜதந்திரிகளுக்குக்கும் யாழ். ஆயருக்குமிடையிலான சந்திப்பொன்று ஆயர் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக யாழ். ஆயர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரக அலுவலகம் செயற்பட்டுவருகின்றது. அவ்வாறே அமெரிக்காவும் துணைத்தூதரகமொன்றை இங்கு அமைத்து இங்குள்ள நிலைமைகளை நேரடியாக அவதானிக்கக்கூடிய நிலைமையை உருவாக்கவேண்டும். இவ்வாறு துணைத்தூதரகத்தை அமைக்கும்போது சிவில் சமூகத்துடனான தொடர்புகளை பேணிவரமுடியுமெனவும் அமெரிக்க இராஜதந்திரிகளிடம், யாழ். ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க இராஜதந்திரிகள், இக்கோரிக்கை தொடர்பில் தாம் கவனத்தில் எடுப்பதாகக் கூறியுள்ளதாகவும் யாழ். ஆயர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பற்றி பாதுகாப்பு செயலாளர் சொல்வது தவறு;
இலங்கையில் காணாமல் போனோர் விவகாரமே மிகப்பெரிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் படையினரால் பிடிக்கப்பட்டு காணாமல் போனோர் என்று எவரும் இல்லை என பாதுகாப்புச் செயலர் கூறியிருக்கிறார்.
ஆனால் இன்னமும் ஏராளமான மக்கள் தமது உறவுகளைக் காணவில்லை என்று கண்ணீரோடுதான் காலம் கழிக்கிறார்கள். இவ்வாறு அமெரிக்கக் குழுவிடம் தற்போதைய நிலைபற்றி விளக் கினார் யாழ்.ஆயர் தோமஸ்சவுந்தரநாயகம்.
ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது அமெரிக்கக் குழுவிடம் ஆயர் மேலும் தெரிவித்ததாவது இறுதிப் போரின் போது ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது பற்றிய சரியான எண்ணிக்கையை இதுவரை அறியமுடியாதுள்ளது.
பெரும்பான்மைப் பலத்தை கொண்டுள்ள அரசு, அந்த எண்ணத்தில் தாம் விரும்பிய எதனையும் செய்யலாம் என்று எதேச்சதிகாரத்தோடு செயல்படுகிறது. எனவே இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தமே தமிழ் மக்களுக்கு இந்த அரசிடமிருந்து நீதியான தீர்வு என்று நன்மையைப் பெற்றுத்தர வழிவகுக்கும்.
இங்கு மக்கள் எதிர்பார்த்த எல்லாமே நடைபெற்றுவருவதாகக் கூறுமுடியாது. வடக்கில் படைக்குறைப்பு செய்யப்படும் என்று அரசு சர்வதேசத்திடம் உறுதியளித்திருந்தது. ஆனால் அவையெல்லாம் இறுவரை நடைபெறவில்லை. மாறாக இராணுவக் கட்டுமானங்களும் அவர்களுக்கான குடியிருப்புக்களுமே அமைக்கப்படுகிறது.
அதற்கான ஆயத்தங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. படையினருக்கு முன்னரைக் காட்டிலும் அதிக சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாத இறுதியில் பல்கலைக்கழக மாணவர்களுடன் படைத்தரப்பு முரண்பாட்டில் இறங்கியது. இதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மாணவர்களுடன் அரசு முரண்படுவது ஆரோக்கியமானதல்ல. வடமாகாணத் தேர்தலை நடத்துவோம் என்று அரசு கூறியிருந்த போதிலும் இந்த விடயம் இன்னமும் இழுத்தடிக்கப்பட்டே வருகிறது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் முழுமையாக நடைபெறவில்லை. வீடமைத்தல், வாழ்வாதாரச் செயற்பாடுகள், உள்ளகக் கட்டுமானங்கள் என்பன உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லைஎன்றார்.