யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் வீதிகளில் கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இதேவேளை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகள், வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கு மாநகர காவல் படை எனும் பெயரில் 05 உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இவர்கள், வீதிகளில் குப்பை போடுபவர்கள், வீதிகள், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்ந்துவிட்டு எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி வீதிப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள் மீதும் சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது தண்டப்பணம் அறவிடும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்தாக தெரிவித்தார்.
அந்தவகையில் வீதி மற்றும் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் 2000 ரூபாயும், மீண்டும் தவறிழைத்தால் 4000 ரூபாயும் வரையும் தண்டம் அறவிடப்படும்.
மேலும் வீதிகள் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு 5000 ரூபாயும் மீண்டும் செய்தால் 10000 ரூபாய் தண்டமும், பொது இடங்களில் மலசலங்களைக் கழிப்பவர்களுக்கு 5000 ரூபாயும் மீண்டும் செய்தால் 10000 ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை வியாழக்கிழமை முதல் செயற்படுத்தப்படும் எனவும் அதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள் ஏற்றவகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வி.மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.