தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபையின் பெண் உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பாகவும், நல்லூர் பிரதே சபையின் தற்காலிக உக்காத குப்பைகளின் சேமிப்பு மையம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி ஒன்பதாம் வட்டாரத்தில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வுச் செயற்பாடுகள் நேற்று(05) இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்டது.
திருமதி- வாசுகி சுதாகரன் தலைமையிலான குழுவினர் வீடு வீடாகச் சென்று “வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்வையே சாகடிக்கும் தற்கொலைக்கல்ல….!” எனும் தலைப்பில் சொந்தச் செலவில் தற்கொலை தொடர்பாக மக்களுக்கான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதுடன் தற்கொலை மற்றும் உக்காத குப்பைகளின் சேமிப்பு மையம் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விழிப்புணர்வுச் செயற்பாடுகள் காலை- 08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை திருநெல்வேலி ஒன்பதாம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் யாழ். மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுமெனவும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி- வாசுகி சுதாகரன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.