தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி யாழ். குப்பிளான் வடக்கு J / 211 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
வலி.தெற்கு உடுவில் பிரதேச செயலகம் முன்பு, இன்று காலை 10.30 அளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
1990ம் ஆண்டுக்கு முன்னர் நிரந்த கல் வீடுகளில் வசித்த இந்த மக்கள் யுத்தம் காரணமாக சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து, கடந்த 23 வருடங்களாக வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2011ம் ஆண்டே இந்த மக்கள் தமது சொந்த இடங்களை பார்வையிட அனுமதிக்கபட்டிருந்தனர். அங்கு சென்று பார்த்த போது எல்லா வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். வீடு, நீர், மலசலகூடம், மின்சாரம் எதுவும் இன்றி பற்றைக் காடுகளுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
குப்பிளான் வடக்கு J / 211 கிராம சேவையாளர் பிரிவில் 242 குடும்பங்கள் உள்ளன. கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஒரு பகுதியில் 98 குடும்பங்களே மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய பகுதிகள் இன்னமும் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளன.
சொந்த இடங்களில் குடியேறியவர்களுக்கு தான் நிரந்தர வீட்டு திட்டங்கள் கிடைக்கும் என அரச அதிகாரிகளால் கூறப்பட்டதால் இம் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சொந்த இடங்களுக்கு திரும்பினர்.
பற்றை காடுகளை துப்பரவு செய்து தகர கொட்டகைகளை போட்டே இம்மக்கள் அங்கு குடியேறியுள்ளனர்.
அத்துடன் கடன்பட்டே இவர்கள் தாம் குடியேற பற்றைகளை துப்பரவு செய்து வசிப்பதற்கு தகர கொட்டகைகள் அமைத்துள்ளனர்.
எனினும் மீள்குடியேறி ஆறு மாதங்கள் கடந்தும் எவ்வித உதவிகளோ நிவாரணங்களோ இந்த மக்களுக்கு கிடைக்கபெறவில்லை.
இடம்பெயர்ந்து வசித்து வந்த கிராமங்களில் கூலி வேலைகளை செய்து வந்தவர்கள், அங்கிருந்து இங்கு மீள் குடியேறியதனால் அவர்களுடைய தொழில் வாய்ப்புக்களையும் இழந்துள்ளனர்.
இதேவேளை உயர் பாதுகாப்பு வலய எல்லை பிரதேசங்களில் இம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். எனவே எல்லை பாதுகாப்புக்காக பரண் அமைத்து பாதுக்காப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதனால் பெண் பிள்ளைகள் சுதந்திரமாக நடமாட முடியாது உள்ளதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் மலசல கூட வசதிகள் இல்லாததால் காலை கடன்களை முடிப்பதில் பலத்த சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் மக்கள் கூறினர்.