யாழில் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் மக்கள்!

தினமும் மாலை ஆறு மணிக்கு பின்னர் என்ன நடக்குமோ- ? யார் வந்து வெட்டுவார்களோ? என்ற அச்சத்தில் வாழ்வதைவிட இந்த ஊரை விட்டு வெளியேறுவதே சரியான முடிவாகும் என யாழ். வாசி ஒருவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்துக் கூறி வருகின்றனர்.

இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததன் வெளிப்பாடே குறித்த நபரின் அபிப்பிராயத்தையும் மக்களின் கருத்து நிலையையும் வெளிக்காட்டி நிற்கின்றது.

தினசரி பத்திரிகைகளிலும் தினசரி மக்களின் பேச்சிலும் யாழில் அரங்கேறும் கொலை, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் என்ற விடயங்களே பரந்துபட்டு காணப்படுகின்றன.

யுத்தத்திற்கு முன்னர் ஆட்கடத்தல், அநாமதேயக் கொலைகள் மலிந்த சந்தையாக யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் காணப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர தயங்கியிருந்தனர். தற்போது நல்லாட்சி அரசெனக் கூறப்பட்டுள்ள நிலையில், அன்று காணப்பட்ட அச்ச நிலை இன்றும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.

அன்று உறவுகளைக் காப்பாற்ற பயந்த மக்கள் இன்று தமது உடமைகளைக் காப்பாற்ற அச்சத்துடன் தினப்பொழுதைக் கழித்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, சிறுவர்கள் மீதான வன்புணர்வு துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுவதுடன், நடந்தேறிய வன்புணர்வுகளுக்கு இன்று வரை தண்டனை வழங்கலில் இழுத்தடிப்புக்களே இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு சிறுமி என்ற வீதத்தில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டு வருகிறார்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றும் ஜி.கே.பெரேரா தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் “மூல வளமே மூளை வளம் “என்று பலராலும் கூறும் அளவுக்கு கல்வித்துறையிலும் அதனோடு சார்ந்த ஏனைய துறைகளிலும் முதன்மை பெற்றவர்களாகத் திகழ்ந்திருந்தனர்.

ஆனால் இன்று அத்தகைய சிறப்புப் பதிவுகளை அழித்தொழிக்கும் வகையில் கொள்ளைக் கும்பல்களும் வன்முறையாளர்களும் சமூக மட்டத்தில் உருவெடுத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த வாரமளவில் யாழ். நகரப் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையிலான வன்முறைச் சம்பவம் ஒன்றும் அரங்கேறியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தென்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்தின் கண்ணாடிகளை சரமாரியாகத் தாக்கி தமது வெறியாட்டத்தை வெளிக்காட்டியிருந்ததுடன், தொடர்ந்து அந்தக் கும்பல் நகரில் அமைந்துள்ள நான்கு வீடுகளுக்குச் சென்று பிரதான கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் என்பவற்றை அடித்து நொருக்கியிருந்தனர்.

இத்தகைய குழுவினரின் நோக்கம் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக , இவர்கள் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களாயின் வீடுகளிலிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றிருப்பார்கள். அவ்வாறு அவர்கள் செய்யாது வீட்டு உடமைகளை சேதப்படுத்துவதன் பின்னணியில் மாற்றுச் சக்திகளின் தூண்டலின் துலங்கலாகவே காணப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக கொள்ளைச் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் பரந்து தினமும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, கோப்பாய் பகுதியில் அண்மையில் சுமார் ஆறிற்கும் மேற்பட்ட வீடுகளில் அதிகாலை வேளை அரை மணி நேரத்திற்கும் சற்று அதிகமான நேரத்துக்குள் ஆயுதமுனையில் வீட்டிலிருந்தவரை அச்சுறுத்தி பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக நாளாந்தம் பல கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின. இவ்வாறு கொள்ளையிட வருபவர்கள் நகை, பணம் என்பவற்றை சூறையாடிச் செல்வதுடன், மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையைத் தோற்றுவிப்பதற்காக கொள்ளையிடச் செல்லும் போது வீட்டிலிருந்தவர்களை வாள்களால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்குவதிலும் ஈடுபடுகின்றனர்.

இதேவேளை, சில கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விநோதமான பண்பியல்புகளையும் வெளிக்காட்டியிருந்தனர். அதாவது வீட்டிலிருந்தவர்களை வாளால் வெட்டிவிட்டு வெட்டுக்காயத்திற்கு கொள்ளையர்கள் எண்ணெய் பூசி விட்டுச் சென்ற சம்பவமும் சங்கானைப் பகுதியில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வன்செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதுடையவர்களே என பொலிஸ் தரப்பினர் கூறுகின்றனர். அத்துடன், வன்முறைகளில் ஈடுபட்டு கைதானவர்களிடமிருந்து விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிக்கை பின்னணியை சாதாரணமாக எடுத்துவிடமுடியாது. ஏனெனில், பணபலத்துடன் உள்ள ஒரு இளவயதுக் கும்பல் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களிலும் வன்செயல்களிலும் தாங்களை கதாநாயகர்களாக சமூகத்திற்கு வெளிக்காட்ட முனைவதன் பின்னணியில் சமாதான சூழலை விரும்பாத ஒரு மாற்று கொள்கையுடைய குழுவினர் இயங்குகின்றனர் என்ற சந்தேகமே எழுகின்றது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு புதிய பொலிஸ்மா அதிபருக்கு வடமாகாண முதலமைச்சர் சிீ.வி.விக்கினேஸ்வரனால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் முக்கிய விடயம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையை இங்கு பார்க்க வேண்டியுள்ளது. அதாவது,”வட மாகாணத்திற்கு சிங்கள மக்களை ஏற்றி வந்த பஸ் வண்டியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் -? அவர்களின் நோக்கமென்ன? என்பன கண்டறியப்படவேண்டும்.

அத்துடன் இதேபோன்ற நடவடிக்கைகள் நல்லுறவை பேண அரசாங்கம் முனைகின்ற சந்தர்ப்பத்தில் அவற்றை முடக்குவதாக அமைந்துள்ளதாகவும் இது இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னோடியாக திகழ்கின்றதா ? என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய கருத்துச் சாரப்பட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியை அலசி ஆராய்வோமானால் குறித்த வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்டே அரங்கேற்றப்படுவதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அதாவது உடமைகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதில் அரசியல் ரீதியான பின்னணி இருக்கும் என்ற நிலைப்பாடே உருவாகியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தை தமிழ்மக்களின் வாக்குப்பலத்தால் மாற்றியமைத்த புதிய நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நன்றி கூறுவதாக வெளிக்காட்டுவது ஒரு புறமிருக்க யுத்தக் குற்ற மீறலுக்கு சர்வதேச அழுத்தப் பிடியிலிருந்து நழுவுவதற்கு நடந்து கொள்ளும் வகையில் காணி விடுவிப்பு, அரசியல் சீர் திருத்த சட்ட வரைபு போன்ற தோரணையில் முன்னெடுப்புக்களை எடுத்து வருகின்றது.

நீண்ட காலமாக தமிழ் மக்களினாலும் தமிழ்த் தலைமைகளினாலும் வடகிழக்கில் இராணுவத் தரப்பை முற்றாக வெளியேற்றுமாறு விடுக்கப்படும் கோரிக்கையும் பெரிதளவில் முனைப்புப் பெறுவதை குழப்பும் செயற்பாடாவே வன்முறை சம்பவங்கள் பரவலாக இடம்பெறுகின்றதா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.

எது எவ்வாறாக அமைந்தாலும் யுத்த வடுக்களினால் உள ரீதியான பாதிப்புக்களில் இருந்து மீளாத எம்மவருக்கு எம்மிலிருந்து உருவாகும் மாற்று வன்முறையாளர்களை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்த் தலைமைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொடர்ச்சியாக தீர்வுத்திட்டம் எனக் கூறி மக்களின் மனங்களை மழுங்கடிக்காமல் நடைமுறை வாழ்வில் ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்க்கும் வல்லமையுடையவர்களாக தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.

அத்துடன் சிறிய சம்பவங்கள் முதல் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் வன்முறைச் சம்பவங்கள் அனைத்தையும் மெருகூட்டி ஆர்ப்பரிக்காமல் வன்முறைகளையும் வன்செயல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

-பாறுக் ஷிஹான்-

Related Posts