யாழிலிருந்து தமிழ்-பௌத்தர் வேட்பு மனு

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்களை கோராமல் விட நாம் தீர்மானித்துள்ளோம். எனினும், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்-பௌத்தரினால் வேட்பாளருக்கான விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என, ஜாதிக ஹெல உறுமயவின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ், ஜாதிக ஹெல உறுமய போட்டியிடும் என்றும் வண்.புதுகல ஜினவங்ச தேரர் தெரிவித்தார்.

அதனடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களை தவிர, ஏனைய 18 மாவட்டங்களிலும் ஹெல உறுமய வேட்பாளர்களை களமிறக்கும் என்றும், அதற்கான விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்சியின் முன்னேற்பாடு மற்றும் தயார்படுத்தல் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஹெல உறுமயவின் மத்திய குழுக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையிலும் 300க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்றும் தேரர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் பிரகாரம், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 18ஆம் திகதியன்று, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும், பத்தரமுல்லை- பன்னிப்பிட்டியவில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் காரியாலயத்தில் இடம்பெறும் என்றும் அந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதுவரையிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளாதவர்கள், கட்சிக் காரியாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts