யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது வங்கிகளில் இருந்து கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்ட நகைகள், பணங்கள், வங்கிக் கணக்குகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது வடக்கு மாகாண சபை.
இது குறித்து வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
அண்மையில் கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி, வன்னியிலிருந்து கொழும்புக்கு எடுத்துச்செல்லப்பட்ட அடகுநகைகளின் ஒரு பகுதியை அதன் உரிமையாளருக்கு வழங்கியிருந்தார்.
இதேபோன்று 1995, 1996 காலப் பகுதிகளில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது அரச மற்றும் தனியார் வங்கிகளில் பொதுமக்களால் அடகுவைக்கப்பட்ட நகைகள், காப்புப் பெட்டகங்கள், வைப்பிடப்பட்ட பணங்கள், உறங்கு நிலைக் கணக்குகள் என்பன கொழும்புக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
எனவே அவற்றை அதன் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான பகிரங்க அறிவித்தலை விடுக்கவேண்டும். இயலாத பட்சத்தில் அத்தகைய நகைகள் மற்றும் பணத்தின் மொத்தப் பெறுமதிக்கேற்ப தொகையை யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வடமாகாண சபையிடம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
யாழ்ப்பாண மக்களின் சொத்துக்களை வங்கிகள் தமதாக்கிக்கொள்வது மிகவும் நியாயமற்றது. எனவே இவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும் – என்றுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.