யார் தடுத்தாலும் பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பேன்!

வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏன் இந்த வீட்டுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எவ்வாறு உங்களால் இவ்வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கமுடியும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது,

எந்த நாடுகளிலும் தற்போது பொருத்து வீடுகளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருட்செலவு, ஆட்செலவு என்பன குறைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்க்கலாம். ஆனால், நான் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளேன். மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இரமணைமடுத் திட்டத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள், பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள் 30 வருடமாக மக்கள் கஷ்ரப்பட்டுள்ளார்கள். இனியும் அவர்கள் கஷ்ரப்படவேண்டுமா?

எனது திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் வைத்திருப்போர் மக்களுக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்கட்டும். எப்படியிருப்பினும் விரைவில் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பேன் எனத் தெரிவித்தார்.

Related Posts