யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் – ததேகூ

புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எந்த அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கா, சர்வதேச விசாரணைக்கா உந்துதலை கொடுக்கும் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சுமந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்ப காலம் முதல் சர்வதேச விசாரணை தான் நீதி விசாரணைக்கு உகந்ததென வலியுறுத்தி வருகின்றது. போரின் போது இரண்டு தரப்பினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு சாரார்களில் ஒருவர் மீது விசாரணை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. குறித்த இரண்டு தரப்பினரும் போர் புரிந்த தரப்பினர் என்ற வகையில் ஒரு தரப்பினர் மீது விசாரணை செய்ய முடியுமா? அதை யாரும் ஏற்றுக்கொள்வார்களா?.

பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்த வேண்டுமென்பதில் யாரும் மாற்றுக் கருத்து சொல்ல முடியாது. பக்கச்சார்பற்ற விசாரணையாக இருந்தால் அது சர்வதேச விசாரணையாக மட்டுமே இருக்க முடியும். இது அடிப்படையான விடயம் இதில் ஏன் ஐயப்பாடு எழுகின்றது என தெரியவில்லை.

ஒரு காலத்திலும் வித்தியாசமான கருத்து தெரிவிக்கவில்லை. சர்வதேச விசாரணை எதிர்மறையான விளைவுகளை கொண்டு வருமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

சர்வதேச விசாரணை தான் வேண்டுமென முழுமையாக போராடிய எம்மைப் பார்த்து, சர்வதேச விசாரணையினை கைவிட்டு விட்டோம் என கூறுகின்றார்கள். எங்கே? எப்போது? சர்வதேச விசாரணை வேண்டாமென தெரிவித்துள்ளோம்?

சர்வதேச விசாரணையினை விட வேறு எதையும் ஆதரிப்போம் என எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததில்லை. நடைபெறவுள்ள தேர்தல் முடிந்த பின்னரும் சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாடு தொடரும். ஐயப்பாடு எழும்புவதாக தெரியவில்லை. சர்வதேச விசாரணை வேண்டாமென வலியுறுத்தியவர்களுக்கு அவ்வாறான பயம் ஏற்பட்டிருக்கலாம்.

சனல் 4 ஊடகத்தினால் ஐ.நா விசாரணை நீதியை வலியுறுத்துவது சந்தேகம் என கசியப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தி கசிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கசிந்த ஆவணம் புனையப்பட்ட ஒரு ஆவணம்´ என்று சுமந்திரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

குமார் பொன்னம்பலத்தை தோற்கடித்த கொப்பேக்கடுவ? யாழ். ஊடகவியலாளர் மாநாட்டில் சுமந்திரனின் தரவுப் பிழையும், தகவல் பிழையும்

Related Posts