தனது பாராளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும் பதவி இலட்சினையையும் பயன்படுத்தி தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதுபோல யாரே மோசடியில் ஈடுபட்டுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என்றும் கிளிநொச்சிக்கு கல்வி அமைச்சு வேண்டாம் என்று கூறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர் தனது அரசியல் நேர்வழியை அதேவழியில் எதிர்கொள்ள முடியாத சில கையாலாகாத மனிதர்களது முயற்சியாகவே இக்கடிதம் விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சியிலுள்ள சிறிதரனின் அறிவகம் எனும் எனும் பணிமனையால் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்றைய தினம் சில இணையத்தளங்களிலும் சிலரது முகநூல்களிலும் எனது பாராளுமன்ற உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும் பதவி இலட்சினையையும் பயன்படுத்தி, நான் கௌரவ வடமாகாண முதலமைச்சருக்கு எழுதியதாக வெளியிடப்பட்டுப் பரப்பப்பட்டு வரும் கடிதம் உண்மைக்குப் புறம்பானதும் என்னால் எழுதப்படாததும் ஆகும் என்பதை முதலில் வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
எங்களுடைய அரசியல் நேர்வழியை அதேவழியில் எதிர்கொள்ள முடியாத சில கையாலாகாத மனிதர்களது முயற்சியாகவே இக்கடிதம் விளங்குகின்றது.
தமிழ் தேசிய அரசியல் தளத்தில் எப்பொழுதும் குழப்பத்தை உருவாக்கி போலித்தனமான விமர்சனங்களால் மக்களிடம் நம்பகமற்ற சூழலை ஏற்படுத்துவதன் மூலம் எமது அரசியல் இலட்சியம் நோக்கிய பயணத்தை அழித்து தமிழ் பேசும் மக்களின் ஒன்றுபட்ட சக்தியை உடைத்தெறிவதன் மூலம் எதிரிகளின் உபாயங்களுக்கு வலுச்சேர்ப்பதே இத்தகைய நாசகார சக்திகளின் நோக்காக இருக்கின்றது என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்வார்கள்.
எமது கட்சியினுடைய கட்டுப்பாடுகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவ வழிகாட்டலையும் ஏற்று வழிநடந்து வருகின்ற என் மீதும் எங்களது கட்சியின் கௌரவ உறுப்பினர்களுக்குள்ளும் முரண்பாடுகளை ஏற்படுத்த முனைந்த இக்கடிதம் தொடர்பிலும் பாராளுமன்றக் கடிதத் தலைப்பை மற்றும் எனது பதவி இலட்சினையை நவீன தொழிநுட்ப முறையில் மோசடியாகப் பயன்படுத்திய சட்டக் குற்றம் தொடர்பில் கௌரவ சபாநாயகர் கருஜெயசூர்ய அவர்களுக்கு எனது முறைப்பாட்டினைச் செய்திருப்பதுடன் பாராளுமன்றத்திலிருந்து நான் கிளிநொச்சிக்குத் திரும்பியவுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டைச் செய்யவுள்ளேன்.
இது தொடர்பில், விடயத்தின் மூலத்தன்மை கண்டறியப்பட்டு தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயாராகியுள்ளேன் என்பதனை எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எமது மக்களுக்கு நான் வினயமாக அறியத்தருகின்றேன்.
என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகம்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
http://www.e-jaffna.com/archives/83693