யாரும் கார் வாங்காதீங்க.. அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களை புதிய கார்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம்.

modi

இதுதொடர்பான உத்தரவையும் அவர்களுக்கு அவர் பிறப்பித்துள்ளார். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிக்கன நடவடிக்கையாக இதை அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளார் மோடி.

அமைச்சர்கள் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட பணியாளர்களும் புதிய கார்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு மோடி அறிவுறுத்தியுள்ளாராம்.

இதுதொடர்பான அறிவுறுத்தலை அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் அலுவலகம் அனுப்பிவைத்துள்ளது.

மேலும் ரூ. 1 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் பிரதமர் அலுவலகத்திடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ரூ 1லட்சத்திற்கு எந்தக் காரும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய கார் வேண்டுமானால் கிடைக்கலாம்.

முன்பு டாடாவின் நானோ கார்தான் 1 லட்சத்திற்குக் கிடைத்தது. தற்போது அது கூட 1 லட்சத்தைத் தாண்டி விட்டது. எனவே அதிகபட்சம் நானோ காரை மட்டும்தான் அமைச்சர்களால் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமைச்சர்கள் நெருங்கிய உறவினர்களை பணியில் சேர்க்கக் கூடாது என்று மோடி உத்தரவிட்டிருந்தார். தற்போது கார் வாங்க தடை போட்டுள்ளார்.

Related Posts