ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள்.
இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
சாலை பக்கம் மணலில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்களில் பலர் விரட்டப்பட்ட நிலையில், மேலும் பலர் கடலை நோக்கி சென்று போராட ஆரம்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆரம்பத்திலிருந்து போராட்டாக்காரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ராகவா லாரன்ஸ். இந்த விஷயம் தொடர்பாக வீடியோ மூலம் பேசியதாவது…
“நான் மெரினாவுக்கு செல்ல முயற்சித்தேன், ஆனால், என்னை விட மறுக்கிறார்கள். போராட்டாக்காரர்களுடன் பேசி இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர எண்ணினோம், ஆனால் அதற்குள் போலீசார் அவசரப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு மணி நேரத்தில் எப்படியாவது வந்து விடுகிறேன். மாணவர்களே, உங்கள் உயிர் முக்கியம், தயவு செய்து கடலில் இறங்கி விடாதீர்கள் என்று கண்ணீர் மல்க கேட்டு கொண்டுள்ளார்”.