யாழ்ப்பாணம் மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள தம்மை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச சேவையிலுள்ள எவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோணாப்புலம் நலன்புரி நிலையத் தலைவர் முத்துத்துரை இன்பராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
மயிலிட்டி, காங்கேசந்துறை, பலாலி ஆகிய கிராமங்களைச் சொந்த இடமாகக்கொண்ட கோணாப்புலம் மக்கள் கடந்த 23 வருடங்களுக்கு மேலாக குறித்த நலன்புரி நிலையங்களில் வசித்து வருவதாகவும், கீரிமலை, தையிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரச காணிகளில் தம்மைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நலன்புரி முகாம்களில் வசிக்கின்ற 240 குடும்பங்களில் பெரும்பான்மையானவர்கள் மயிலிட்டிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவ்வாறு நலன்புரி முகாமிலுள்ள மக்களை காணிகளுக்கான ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற செயற்பாடுகளில் பங்குபற்றுமாறு அரசியல்வாதிகள் கோரிக்கை விடுக்கின்றனர் என்று குறிப்பிட்ட கோணாப்புலம் நலன்புரி நிலையத் தலைவர் ஆனால் அரசியல் கட்சி ஒன்று நடாத்திய உண்ணாவிரதத்தில் அப்பிரதேச மக்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
இருந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காணிகள் தமக்குக் கிடைக்காதென்றும் மாற்று இடங்களாகிய கீரிமலை, தையிட்டிப் பகுதிகளில் குடியமர்த்துமாறும் அப்பிரதேசங்களில் குடியமர்த்துவதன் மூலம் தமது தொழில்களை செய்யக்கூடிய வசதிகள் ஏற்படும் என்றும் தெரிவித்த கோணாப்புலம் நலன்புரி நிலையத் தலைவர் குறித்த நலன்புரி நிலையத்தில் 240 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் 150 குடும்பத்தினைச் சேர்ந்த மக்கள் கடற்றொழிலை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளதாகவும், கீரிமலை பகுதியில் தம்மை குடியமர்த்துவதன் மூலம் தமது தொழிலை செய்து வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.