யாருக்கு வாக்களிப்பது?

வருகின்ற தேர்தல் தொடர்பிலான வாக்களிப்பு தொடர்பில் எனது இறுதி நிலைப்பாடு என்ன என்று என்னாலேயே தீர்மானிக்க முடியவில்லை.
அதற்காக வருந்தவில்லை

மகிந்த பற்றி நாம் பேசிக்கொள்வதால் அல்லது அவரது வருகையின் விளைவு பற்றி நாம் ஆராய்வதிலும் பலனில்லை. தேசிய ரீதியில் ஏற்படப்போகும் அந்த மாற்றத்தால் எமக்கு எந்த விளைவும் இல்லை காரணம் அதனால் பாதிக்கப்படபோவது சிங்கள மக்கள் தான் அதனை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.அவரது வெற்றியும் தோல்வியும் சிங்கள மக்களின் கையில் மட்டுமே இப்போது உள்ளது.

இங்கு நாம் எமது பிரதேச அரசியலை எடுத்துக்கொண்டால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எங்களின் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது எனினும் அவர்களது கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தற்போது இல்லை. நிறைய பேர் வெளித்தள்ளப்பட்டனர் அல்லது வெளியேறினர் புதியவர்கள் பலர் நுழைந்தனர். ஆகமொத்தத்தில் அது உருமாற்றம் பெற்றுவிட்டது.

கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் முக்கிய பங்குவகிக்கும் தமிழரசுக்கட்சி உண்மையில் சனநாயகப்பண்புகளை பேணவில்லை. அடிப்படை கட்சி கட்டமைப்புக்களை பேணவில்லை .பெயரளவில் மாத்திரம் அது இருக்கிறது தவிர முடிவுகள் ஒரு சிலரால் மட்டுமே எடுக்கப்படுகின்றன.

சிறந்த எதிர்கால அரசியல் தலைமை வளர்த்தெடுக்கப்படவில்லை அல்லது அதற்கு அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தமது இருப்புக்களுக்காகவும் பதவிகளுக்காகவும் பிழைகளை சுட்டிக்காட்ட பலரும் தயங்குகின்றனர்

தமிழ்தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அடி்ப்படையில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பில் கொள்கை  ஒற்றுமை உடையவர்களாகவே உள்ளனர் ஆனால் பெயர்களால் மாயாஜாலம் செய்கின்றனர்.தேசம் நாடு என்பன இரண்டும் ஒன்று என்றும் சிலர் கூறுகின்றனர் .State Province Country என்றவற்றில் வித்தியாசங்களை நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதில் தெளிவு ஏற்படுத்துவதும் கடினம். அனைவரும் ஒற்றையாட்சிதான் வலியுறுத்துகின்றனர்

அப்படிப்பார்த்தால் ஒற்றையாட்சியினை தீர்வுக்கு சரிவராது என்று சொல்லும் கூட்டமைப்பு எந்தவகையிலும் மக்கள் முன்னணிக்கு சளைத்ததாக இருக்காது .

இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இப்போது  ஒற்றையாட்சினை வலியுறுத்தும் சத்தியப்பிரமாணத்தில் கையெடுத்திடும் பராளுமன்ற  உறுப்பினர் பதவிக்காகதான் இரண்டும் போட்டியிடுகின்றன.கூட்டமைப்பின் நடவடிக்கைள் போக்குகளில் விரக்தியுற்றவர்களின் களமாக மக்கள் முன்னணி திகழ்கின்றது. கூடுதலாக இளைஞர்களின் ஆதரவினை அது கொண்டிருக்கின்றது

ஆரம்பத்தில் ஆதரவு குறைந்திருந்த அந்த கட்சி தற்போது ஆதரவினை பெற்று வருகின்றது. அதற்கு கூட்டமைப்பின் துாரநோக்கற்ற அரசியல் பணிகள் செயற்பாடுகள் தான் அன்றி தீர்வுக்கொள்கை தொடர்பிலான மாற்றுத்தேடலாக இந்த அணி திகழவில்லை என்று நாம் நம்புகின்றேன்.

இவ்வாறான மாற்று அணிஒன்று  இருப்பது அவசியமே அவ்வாறு இருந்தால் தான் கூட்டமைப்பு தன்னை திருத்திக்கொள்ள வழிசமைக்கும். இம்முறை முன்னணி 1 ஆசனைத்தினை பெற்றுக்கொண்டால் கூட கூட்டமைப்பு தன்னை திரும்பி யோசிக்க வைக்கும்.மாறங்களை உள்வாங்க அழுத்தத்தினை பிரயோகிக்கும் .

தொடர்ந்து தாயகம் விடுதலை மற்றும் புலி கோசங்கள் தமிழ் தேசிய அரசியலுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பமுடியாது அதற்கும் ஒரு கால வரையறை உண்டு யுத்தம் முடிந்து 6 ஆண்டு கள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து அவ்வாறான உணர்ச்சி நிலைகள் நவீன அரசியலுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் முன்னாள்போராளிகளை கொண்டு  செய்யப்படும் அரசியல் எந்தவகையிலும் உணர்ச்சிகரமானதாக அமையப்போவதில்லை.

இது வரை அரசுடன் இணைந்திருந்த ஈபி டீபி போன்ற கட்சிகள் தமது இருப்பினை தமது வாக்கு வங்கிகளின் ஊடாக தக்கவைக்க பகீரத பிரயத்தனம் செய்தவிண்ணம் உள்ளன அத்துடன் சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமது வாக்கு வங்கியினை அதிகரித்து ஒரு இடத்தினையாவது கைப்பற்றிவிடவேண்டும் என துடிக்கின்றன. இல்லாவிடடால் அவர்களால் தேசிய ரீதியில் கிடைக்கும் போனஸ் ஆசனத்துக்கான வாக்கு வங்கியில் அதிகரிப்பாவது  காட்ட முனைகின்றன.

மற்ற போட்டியிடப்போகும் உதிரிக்கட்சிகள் சுயேட்கைள் பற்றி கதைக்கவே தேவையில்லை.கட்டுப்பணத்தினை இழந்து போகும் நிலைதான்

யாழ் மாவட்டத்தி்ல் இருப்பதோ 7 இடங்கள் கூட்டமைப்பு 5 இனை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு 4  பெறுவது உறுதி.

கூட்டமைப்பின் மீதான ஆற்றாமையினை கொட்டுவதற்கான அல்லது கூட்டமைப்பு எதிர்காலத்தில் தன்னை மாற்றிக்கொள்ள அழுத்தம் பிரயோகிப்பதற்காக  மக்கள் முன்னணிக்கும் வாக்களிப்பது தவறாகப்படவில்லை. மக்கள் முன்னணியினை ஆதரிப்பவர்களில் பலர் கூட்டமைப்பினையும் ஆதரி்கின்றார்கள் அவர்களுக்கு ஆட்கள் தான் பிரச்சனை கூட்டமைப்பின் உட்கட்சி சனநாயகம்தான் மிகப்பெரிய பிரச்சனை.இந்நிலையில் அதில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் தமிழ்த்தேசியத்துக்குதான் வாக்களிப்பதாக இருக்கும் என கருதுகின்றேன்

தேர்தலை புறக்கணிக்கச்சொன்னவர்கள் புறக்கணித்தவர்கள் அதனால் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு வாக்களித்தாலும் அது பிழையில்லை என்று எப்படி சொல்ல முடியும் என நீங்கள் கேட்டால் அவர்கள் கூட்டமைப்பினை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் தங்களை அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தவே அவ்வாறு செய்தார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் நான் கருதுகின்றேன்.இதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது வேறு கதை.

இரண்டு தரப்பும் பாராளுமன்றத்துக்கு சென்று தீர்வு தொடர்பில் எதுவும் சாதிப்பார்கள் என்று நான் கருதவில்லை. சிங்களவன் மனம் வைக்காத வரை எதுவும் நடடைபெறாது . எமது பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்க பிரதிநிதிகள் செல்கிறார்கள் என்று திருப்திப்படலாம். அவ்வளவுதான். முன்னைய அரச ஆதரவு உதிரி கட்சிகள் போல இவர்கள் ஒருபோதும் மகிந்தவை ஏற்கவில்லை. மகிந்த இருந்திருந்தால் தீர்வு கிட்டியிருக்கும் என்றும் கூறியிருக்கவில்லை.

உண்மையில் தமிழ் மக்களின் தீர்வுக்காக இணக்கமின்றி தீவிரமாக போராடுபவர்களாக இருந்தால் இவர்கள் அனைவரும் பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணித்திருக்கலாம். அதுவும் போராட்டம் தான் அப்படி செய்மாட்டார்கள். அது தவறுமில்லை.ஆக மொத்ததில் மோதகமும் கொழுக்கட்டையும் தான்.தென்னிலங்கையில் ஐக்கியதேசயகட்சியும் சுதந்திரக்கட்சியும் போல தான்.

என்னைக்கேட்டால் எதிர்காலத்தில் மக்கள் முன்னணி மகாணசபை உள்ளுராட்சி சபை அனைத்திலும் போட்டியிடவேண்டும் ஒரு சில இடங்களையாவது கைப்பற்றி கூட்டமைப்பிற்கு தலையிடியாக இருப்பதன் மூலம் எமக்கான தமிழ் தேசிய அரசியல் வலுவடையும்.

வீட்டுக்கா சைக்களுக்கா வாக்களிக்கபோகின்றீர்கள் என கேட்டால் இன்னும் முடிவில்லை என்பது தான் என் பதில்.இப்படித்தான் இங்கு பலரும்.அதனால் தமிழ்த்தேசியத்திற்கு பாதிப்பு என்று நான் கருதவில்லை எதோ ஒன்றை எல்லோரும் தெரிவுசெய்யபோகின்றோம் சுவை மாறாது.

தேர்தல் பார்வை தொடரும்..

-தவரூபன் –

Related Posts