இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,
“70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் எமது உரிமைப் போராட்டங்களிலே நாம் சுமந்த வலிகளும், இழப்புக்களும், வேதனைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை என்பதை யாரும் மறுக்க முடியாது. நாம் உயிர்கொடுத்து காத்துவரும் எமது அடிப்படை அபிலாசைகள் போலிச் சலுகைகளுக்கும், பகட்டுக்கும் விலைபோகக் கூடியவை அல்ல.
நாம் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையால் இதுவரைகாலமும் நாம் சாதித்தது எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இந்த எண்ணிக்கையால் எமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை. ஆனால் அங்கு ஒற்றுமையுடனும், உறுதியுடனும் தெரிவிக்கப்படும் எமது நிலைப்பாடுகளும், கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது நாம் எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றோம் என்பதிலும் பார்க்க என்ன நிலைப்பாடுடையவர்களை அனுப்புகின்றோம் என்பதே முக்கியத்துவமாகின்றது.
கொள்கை ஒன்றான கட்சிகளிடையேகூட கருத்து வேற்றுமைகள் விதைக்கப்பட்டு உரமூட்டி வளர்க்கப்படுகின்றன. ஒரு கட்சிக்குள்ளேகூட ஒற்றுமையற்ற தன்மையும் சுயநலப்போக்கும் வெளிப்படையாகத் தெரிவது வேதனையானது. இந்தப் பிரிவுகள் கண்டு நாம் சோர்ந்துபோய்விட முடியாது. தேர்தல் அரசியல் கடந்து பொதுமக்களாகிய எமது ஒன்றிணைந்த அழுத்தங்கள் ஒற்றுமையான ஒரு தூய அரசியல்பாதைக்கு வித்திடும்.
எமது அபிலாசைகள் என்னவென்பதை தமிழ் மக்கள் பேரவையினராகிய நாம் தீர்வுத்திட்டமாக எழுத்துருவில் வடித்து வெளியிட்டிருந்தும், அதன் அடிப்படைகளை இதயசுத்தியுடன் வலியுறுத்த திராணி அற்றவர்களை எமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்ய முடியாது. எமது பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக உணராதவர்களால் பிரச்சினைகளை நியாயபூர்வமாக அணுகமுடியாது.
நாம் எமது பொது நோக்கங்களைக் கருத்திற்கொள்ளாது சுயலாபத்திற்காக வாக்களிப்போமாக இருந்தால், நாம் தெரிவுசெய்யும் பிரதிநிதிகளும் சுயநலத்திற்காக இயங்குவதைத் தடுக்கமுடியாது போய்விடுவதுடன் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் எமது கருத்துக்களாக கொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது.
எம் வாக்குகளைப் பெற்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதற்குப் பதிலாக இனி வாக்களித்தபின் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்று சிந்திப்போம், செயலில் இறங்குவோம். வாக்களித்துவிட்டு உறங்கிக்கொண்டிருக்க முடியாது. எங்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் எமது பிரதிநிதிகளை ஒற்றுமையுடன் நெறிப்படுத்தி வழிப்படுத்தும் பாரிய பொறுப்பு பொதுமக்களாகிய எங்களுக்கு இருக்கிறது.
தற்போது மாற்றம்பெற்றுவரும் சூழ்நிலைகளால் உலக வல்லரசுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுவருகின்றது. அவர்களின் கவனம் எம்மை நோக்கித் திரும்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவ்வேளையிலே எமது உறுதியான ஒருமித்த நிலைப்பாடுகள் முக்கியத்துவம்பெறும். எனவே எமது அபிலாசைகளை உள்வாங்கி, புரிந்துணர்வுடன் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் விடயங்களை அணுகி அதை முன்னகர்த்தக்கூடிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வது எமது வரலாற்றுக் கடமையாகும்.
எமது வாக்குரிமை பலத்தைக் காட்டவும், விலைபோன வாக்குகளை செல்லாக்காசாக்கவும், வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்க முழுமுயற்சி எடுப்போம். சரியான பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கு தவறாது சென்று வாக்களிப்பதுடன் எமது மூன்று (03) விருப்புவாக்குகளையும் பதிவிடுவோம்.
எமக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களின் பெயரால் உண்மையாகவும் ஒற்றுமை உணர்வுடனும் நேர்மையாகவும் தூய அரசியலை முன்னெடுத்து எமது நிலைப்பாடுகளை அஞ்சாது வலியுறுத்தி முன்னேறக்கூடியவர்களை எமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்வோம். எமக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சலுகைகளுக்காகவும் இலஞ்சத்திற்காகவும் எமது கடமையிலிருந்து விலகிவிட முடியாது.
தேர்தல் அரசியல் கடந்து எமது அபிலாசைகளுக்காய் ஒன்றுபட்டு உழைக்கும் ஒரு தளத்தை உருவாக்குவோம். அதற்காக ஒன்றிணைவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.