வடமாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்கள் சுதந்திரமாக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூடக் கண்டுபிடிக்க இயலாது என்று கூறியுள்ளார் வடமாகாண உதவித் தேர்தல் ஆணையாளர் அச்சுதன்.
“எந்தவித அச்சமுமின்றித் தபால் மூலவாக்களிப்பில் அரச ஊழியர்கள் அனைவரும் பங்கேற்க முடியும்” என்றும் கூறினார். யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியும் எனக் கூறி அரச ஊழியர்கள் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து உதவித் தேர்தல் ஆணையாளரிடம் வினவப்பட்டது. “நாளை திங்கள் கிழமையும், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமையும் வடக்குமாகாண அரச திணைக்களங்களில் தபால் மூலவாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. சகல திணைக்களங்களிலும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் கடமையிலிருப்பர். இதனைவிடத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் கடமையாற்றுவர்” என்று தெரிவித்தார் ஆணையாளர். “வாக்களிப்பில் இரகசியம் பேணப்படும். எக்காரணம் கொண்டும் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே அரச ஊழியர்கள் அச்சமின்றி சுதந்திரமாக நீங்கள் விரும்பியகட்சிக்கு வாக்களிக்க முடியும்’ என்று அச்சுதன் மேலும் கூறினார்.