பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார். தமிழில் முத்திரை, கம்பீரம் படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திடீரென்று அரசியலில் குதித்தார். ராஷ்டிரிய ஆம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.
இதில் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. டெபாசிட்டையும் இழந்தார். இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்துடன் கவர்ச்சி உடை அணிந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் அங்குள்ள இந்தியர்கள் சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் பங்கேற்க ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அவரும் கவர்ச்சி உடை அணிந்து விழாவுக்கு வந்து இருந்தார்.
அந்த ஆடையில் நரேந்திர மோடியின் உருவப்படங்கள் இருந்தன. முன்புறம் பின்புறம் என்று ஆடை முழுவதும் மோடி படங்களாக காணப்பட்டன. இதை பார்த்ததும் கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
அத்துடன் மோடி ஆடையை உடுத்திக்கொண்டு இருக்கும் தனது படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு இருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ராக்கி சாவந்த் செயலை பலர் கண்டித்து உள்ளனர். பிரதமரை அவமதித்த அவர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.
மோடி உருவப்படத்துடன் ஆடை அணிந்தது ஏன்? என்பது குறித்து ராக்கி சாவந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவரது உருவப்படத்துடன் ஆடை அணிந்து ஒபாமா நகரில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டேன். மோடியை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அவரும் இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு இருக்கிறார். எனவே மோடி உருவப்படத்துடன் நான் ஆடை அணிந்து சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது தவறு அல்ல”.
இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.