மோடி அரசாங்கத்துக்கு மக்கள் ஆலோசனை வழங்க புதிய இணையதளம்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று நேற்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக ‘mygov.nic.in’ என்ற புதிய இணையதளத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

modi

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த மே மாதம் 26ஆம் தேதி அன்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது.

நேற்று இந்த இணையத்தளத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்தி மோடி இந்த இணையதளம் மக்களுக்கும், அரசுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் என்று தெரிவித்தார்.

அத்துடன் புதிய மத்திய அரசின் 60 நாள் ஆட்சி குறித்த மக்களின் கருத்துக்களை இதில் பதிவுசெய்யுமாறும் மோடி தெரிவித்துள்ளார்.

பங்களிப்பு இல்லாமல் ஜனநாயம் வெற்றியடையாது, மக்களின் இந்த பங்களிப்பு தேர்தல் காலத்தோடு மட்டும் நின்று விடக்கூடாது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி கங்கையை சுத்தப்படுத்துதல், பெண் குழந்தை கல்வி, சுத்தமான இந்தியா, திறன்மிக்க இந்தியா, போன்ற முக்கிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் முறை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

பொதுமக்கள் இந்த முயற்சியை சிறந்த முறையில் வரவேற்பார்கள் என்று தான் நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் தேசிய தகவலியல் மையம் இந்த இணையதளத்தை நிர்வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts