இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவிசாய்த்து செயற்படும் என்று நம்புகின்றேன். கூட்டமைப்பு அவ்வாறு செயற்படுவார்களாயின் நிச்சயமாக நாங்கள் அதனை முழுமனதோடு வரவேற்போம் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (27) தெரிவித்தார்.
யாழ். அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் உரிமை எவ்வாறு எமது மக்களுக்கு பிரதானமானதோ, அதேபோல பொருளாதார அபிவிருத்தியும் பிரதானமானதாகும். நாம் முன்னெடுக்கும் திட்டங்கள் யாவும் சமூக பொருளாதார அபிவிருத்தியாக எமது மக்களின் வாழ்விடம் தோறும் பரவ வேண்டும். அதில்தான் எமது மக்களின் வாழ்வியல் எழுச்சியும் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது.
வடமாகாண சபை என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அது நனவாகிவிட்டது. அதில் இருந்து தான் நாம் ஆரம்பிக்க முடியும். வடமாகாண சபை ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்க முடியும்.
இங்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருக்கின்றார். அவர் இதனை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் அபிவிருத்தியையும், அரசியல் உரிமையையும் சமமாக முன்னெடுப்பார் என நம்புக்கின்றேன்.
சமீபத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமரை சந்தித்து உள்ளார்கள். எதை நாங்கள் சொல்லுகின்றோமோ, எதை நாங்கள் கேட்கின்றோமோ, எதை நாங்கள் நம்பி இருந்தோமோ, அதைத்தான் இந்திய பிரதமரும் கூறியுள்ளார். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஏற்றுக்கொண்டு செயற்படுவார்கள் என நம்புகின்றேன்.
இலங்கை அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்துள்ளது. அதில் பங்கெடுப்பதன் ஊடாக விரைவில் எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.
எங்களுடைய மக்களின் அபிலாஷைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
நாம் இங்கு இந்தக் கைத்தொழிற்பேட்டையை மட்டுமல்ல, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனையிறவு உப்பளம் இன்னமும் ஓரிரு மாதத்தில் தனது உற்பத்தியை தொடங்கிவிடும்.
அதேவேளை, பரந்தன் இரசாயன தொழிற்சாலையும் செயற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அடுத்த ஆண்டளவில் அதுவும் செயற்பட தொடங்கி விடும். எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும்.
இவ்வாறாக நமது இணக்க அரசியல் ஊடாக நாங்கள் பல விடயங்களை சாதித்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.