2015ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றி கிண்ணத்திற்கான யாழ். மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகின்றது.மைலோ வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு நேற்று யாழில் உள்ள கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
மைலோ கிண்ணத்திற்கான ஆரம்ப நிகழ்வு பருத்தித்துறை ஈகிழ்ஸ் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்ட லீக்குகலான பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி,யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் போட்டிகள் பிரிவு பிரிவாக இடம்பெறவுள்ளதுடன் போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் இடம்பெறவுள்ளது.
மேலும் குறித்த மைலோ வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் மூன்றாவது முறையாக நடத்தப்படும் போட்டியாகும்.
முதல் வருடத்தில் 24 அணிகளும் இரண்டாம் வருடத்தில் 60 அணிகளும் இம்முறை 100 அணிகளும் பங்குபற்றவுள்ளன.
இதில் யாழ். மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன், மேலதிக அரச அதிபர் பி. செந்தில்நந்தனன், யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் ஜி.கே . பெரேரா, யாழ். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர். மோகனதாஸ், நெஸ்லே நிறுவனத்தின் செயல்படுத்தல் மற்றும் அனுசரணைக்கான முகாமையாளர் சஞ்சீவ விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.