ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவில் வடக்குக்கான தனது முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்துவைத்த மஹிந்த அன்று மாலை கிளிநொச்சியிலும் பிரசாரத்தை நடத்திவிட்டு கிழக்கு மாகாணம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வடக்கு வரும் மஹிந்த, இங்கு மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு வரும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரட்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் வடக்கு விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும், மஹிந்தவின் சலுகைகளுக்கு விலைபோகாத வடக்கு மக்கள் மைத்திரிபாலவை வரவேற்க தயாராகவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.